நீதிமன்ற உத்தரவு எதிரொலி. சூடு பிடித்தது ஹெல்மெட் வியாபாரம்

helmet storesதமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கண்டிபாக ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஹெல்மெட் விற்பனை சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சூடு பிடித்துள்ளது. ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதி வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அடுத்த நாளே ஹெல்மெட்களை வாங்க மக்கள் அதிக அளவில் கடைக்கு வரத்தொடங்கிவிட்டதாக ஹெல்மெட் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஹெல்மெட் வியாபாரிகள் அதிகளவில் ஹெல்மெட்டுக்களை கொள்முதல் செய்து வைத்துள்ளதாகவும், இன்னும் பதினைந்து நாட்களுக்கு இந்த வியாபாரம் அதிகளவில் இருக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐஎஸ்ஐ தரம் கொண்ட ஹெல்மெட்களைத்தான் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத ஹெல்மெட்களை வாங்க முன்வருவதில்லை என்றும் ஐஎஸ்ஐ தரம் கொண்ட ஹெல்மெட்கள்தான் வாங்கவே பலரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஹெல்மெட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இல்லை என்றாலும் பெல்காம், டெல்லி, உத்தரகாண்ட் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஹெல்மெட் அதிகளவில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. ஒருசில கடைகளில் வெளிநாடுகளில் இருந்தும் ஹெல்மெட்கள் இறக்குமதியாகிறது. 26-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட மாடல்களில் ஹெல்மெட் களை தயாரிக்கின்றன. ரூ.295-ல் இருந்து ரூ.15 ஆயிரம் வரை ஐஎஸ்ஐ தரம் கொண்ட ஹெல்மெட்கள் விற்பனைக்கு உள்ளன. ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஹெல்மெட்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply