சமீபத்தில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கணக்கை தவறாக போட்டதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து வாட்ஸ் அப்பில் வெளியான கதை ஒன்றை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருமண விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திருச்சி தொழிலதிபர் வி.கே.என் மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், அந்த விழாவில் பேசியதாவது, “வாழ்க்கையில் கணக்கு போட்டு பார்க்கணும், கணக்கு தவறானால் எல்லாம் தவறாகிவிடும். இப்போதெல்லாம் நீதிபதியே கணக்கு தவறாக போடுவது நடக்கிறது. நீதிபதி போட்ட தவறான கணக்கில் சிறைக்குள்ளே இருக்கவேண்டியவரெல்லாம் இப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள கொடுமையை எல்லாம் நாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.
முன்பெல்லாம் காந்திகணக்கு, நேருக்கணக்கு என சொல்வார்கள். ஆனால் குமாரசாமி கணக்கு ஒன்று வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஒரு கதை உலா வருகிறது.
ஒருவீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுக்காமல் இருக்கிறார். அவரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என நண்பர்கள் கேட்கும்போது, அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர், “திருடன் ஒருகடிதம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறான். அதில் நீ போலீஸில் புகார் கொடுத்தாலும் பரவாயில்லை. 10 சதவீதம் பொருட்களைதான் திருடியுள்ளேன். எனவே இது குற்றமில்லை!” என எழுதியுள்ளான். அதனால்தான் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இது நான் புதிதாக சொல்லவில்லை. வாட்ஸ் அப்பில் வலம் வரும் தகவல். குமாரசாமி தீர்ப்பு இப்படிதான் உலா வருகிறது.
தமிழகத்தில் பதவியை பதவியாய் நினைக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள். நான் எந்த விசயங்களை செய்தாலும் தலைவர் கலைஞருக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டேன். அந்த வகையில் நான் பதவியில் இருந்தாலும், பொறுப்பாய் பணியாற்றுவதையே தலைவர் விரும்புவார். தமிழைப்போல், வாழ்க!”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார்.