காவிரியின் குறுக்கே புதியதாக நான்கு அணைகள் கட்ட கர்நாடக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேலும் அணைகள் கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகதாது திட்டத்துக்கு முதல் கட்டமாக கர்நாடக பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேகதாது பகுதியில் 4 அணைகளை கட்டி அதன்மூலம் 70 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமல்படுத்தலாம் என்றும் பெங்களூருவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஒன்று திட்ட அறிக்கையை தயாரித்து கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
70 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு ஒரே அணையை கட்டினால் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்குவது கஷ்டம் என்றும், அதனால் 4 இடங்களில் அணையை கட்டினால் வனத்துறையின் அனுமதி எளிதில் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்ட அறிக்கையின்படி அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.