பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று வரும் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்க ஐ.நா ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுமார் 45 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் முதலில் சூரிய நமஸ்காரம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் சூரிய நமஸ்காரம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பாஜக தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக எம்.பிக்களில் ஒருவரான சாக்ஷி மகாராஜ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “” யோகா என்பது மனிதனை முழுமையாக ஆக்கக்கூடியது. இதில் மதத்தை புகுத்தக் கூடாது. டெல்லியில் நடக்கும் யோகாசன நிகழ்ச்சியை வெற்றி பெற செய்ய வேண்டும். இஸ்லாமில் முகம்மது என்ற பெயர் மிகப்பெரிய இடத்தில் உள்ளது. முகம்மது மிகச் சிறந்த யோகி என்று நான் கருதுகிறேன். அவர் யோகா செய்துள்ளார்.
முஸ்லிம் என்ற வார்த்தையுடன் ஐமேன் சேர்ந்து முசல்மேன் வந்துள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது நான் உண்மையான முஸ்லிம் ஆவேன். யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் ஒரு அங்கமாகும். ஆனால் சூரியனிலும் மதத்தைப் பார்க்கிறார்கள். சூரியன் இல்லாவிட்டால் நீங்கள், நான் எல்லாரும் குருடன் ஆகி விடுவோம். உலகமே குருடாகி விடும்.
நமக்கு கண் ஒளி தரும் சூரியனை மத எல்லைக்குள் அடக்கக் கூடாது. சூரியனை மதவாதமாக கருதுபவர்களுக்கு, சூரிய ஒளியைப் பெற உரிமை இல்லை. அவர்கள் சூரிய ஒளி பெறக்கூடாது” என்று கூறினார்.