லலித்மோடி விசா விவகாரத்தில் நடந்தது என்ன? இங்கிலாந்து அரசு விளக்கம்
ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழலில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடிக்கு விசா வழங்க பரிந்துரை செய்ததாக சுஷ்மா ஸ்வராஜ் மீது கடும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் நிலையில் லலித்மோடிக்கு விசா வழங்குவதில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து அரசு இன்று விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த ஆண்டு லலித்மோடி மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்தில் இருந்து போர்ச்சுகல் செல்வதற்காக இங்கிலாந்து அரசிடமிருந்து பயண ஆவணங்கள் பெற மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக கடந்த சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில்தான் லலித்மோடிக்கு தான் உதவியதாகவும், விசா வழங்குவதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து இங்கிலாந்து அரசு முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, இங்கிலாந்து உள்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ”வழக்கமாக இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களில் நாங்கள் விரிவான விளக்கம் எதையும் அளிப்பதில்லை. இந்த பிரச்னையைப் பொறுத்தவரை இங்கிலாந்து நாட்டின் உரிய சட்டவிதிகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டு அதன்படி முடிவெடுக்கப்பட்டது.
மேலும், இங்கிலாந்தின் விசாகள் மற்றும் குடியேற்ற இலாகாவின் தலைமை இயக்குனர் சாரா ராப்சன், இந்த பிரச்னையை உரிய முறையிலும், தொழில்முறை ரீதியான அடிப்படையிலும் திருப்திகரமாக கையாண்டார் என இங்கிலாந்தின் நிரந்தர செயலாளர் குறிப்பிட்டு உள்ளார்” என்று கூறி உள்ளார்.