சாரல் மழையுடன் குற்றால சீசன் தொடங்கியது. வியாபாரிகள் மகிழ்ச்சி.

courtralamபூலோகத்தின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் சாரல் மழையுடன் சீசன் தொடங்கிவிட்டதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடம் திருக்குற்றாலம். பசுமையான மலைத்தொடரும், அடர்ந்த வனங்களும், அரிய வகை வனவிலங்குகளும் நிறைந்த இந்த பகுதியில் பல்வேறு வகையான அரிய மூலிகைகள் இந்த மலையில் உள்ளது. குற்றால அருவிக்கு வரும் தண்ணீர் இந்த மூலிகைகளை கடந்து வருவதால் இந்த அருவியில் நீராடுவது உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்து பூத்தூறலாக பொழியும். கொட்டும் அருவிகளிலும் உடலை நனைக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இங்கு குவிந்துவிடுவார்கள். இம்மூன்று மாதங்களே சீஸன் காலம்.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கியதுமே சீஸன் ஆரம்பமாகிவிடுகிறது. தென்மேற்குப் பருவமழை உச்சத்தில் இருக்கும்போது அருவிகளில் அளவுக்கதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும். அப்போது வீசும் தென்றல் காற்றும், சாரலும் குற்றாலத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரம்மியமான சூழலை கொடுக்கும்.

இந்த ஆண்டு கடந்த 2 வாரமாக சீஸன் தொடங்காமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்குப் பருவக்காற்று வீசுகிறது. நேற்று காலையில் அருவிப் பகுதிகளில் லேசான சாரல் விழுந்தது. பேரருவியில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது.

மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் விழுந்து சீஸன் தொடங்கிவிடும் என்று இங்குள்ள வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave a Reply