சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச்சேதமும், காயங்களும் பயணிகளுக்கு ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “இன்று காலை 4.30 மணியளவில் பெங்களூரு – சென்னை மெயில் ரயில் பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டி என இரண்டு பெட்டிகள் மட்டும் தடம் புரண்டன. விபத்து நடந்த அந்தப் பகுதியில் அனைத்து ரயில்களுமே குறைந்த வேகத்தில் வருவது வழக்கம். எனவே, பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்துக்குள்ளான அந்த இரண்டு பெட்டிகளிலும் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. காலை 7.45 மணியளவில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதுவரை புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், விபத்தால் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் அதிகாலை நேரத்தில் மின்சார ரயில் அலுவலகத்திற்கு செல்லும் பயணிகள் அனைவரும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து பீச் ரயில் நிலையத்துக்கு அவசர அவசரமாக சென்றனர். மேலும் பலர் பேசின் பிரிட்ஜில் இருந்து ஆட்டோவில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றதால் இந்த பகுதி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்று நல்ல வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கு ஏராளமான ஆட்டோ சவாரி கிடைத்ததாக பேசின் பிரிட்ஜ் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் கூறினர்.