சதுரகிரி மலையில் சிறப்பு அனுமதியின்படி நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் திரண்டனர். இதனால் கடந்த முறை களையிழந்து நடந்த பவுர்ணமி வழிபாடு இந்த அமாவாசை முதல் சகஜ நிலைக்கு திரும்பியது.சதுரகிரி மலையில் கடந்த மே 17 ல் நடந்த வைகாசி அமாவாசையின் போது மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர். 9 பேர் காட்டாற்று வெள்ளத்தில்
இழுத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தடைவிதிக்கப்பட்ட விபரம் தெரியாமல் தினமும் மலைக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடந்த இருவாரங்களுக்கு முன் நடந்த பவுர்ணமி விழாவின் போது சிலநுாறு பக்தர்கள் மட்டுமே சிறப்பு அனுமதியின் படி சென்றனர்.
நேற்று அமாவாசை வழிபாடு நடந்த நிலையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட விபரம் தெரிந்து
ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்றனர். அனைவரின் விபரங்களும் அடிவாரத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகே அனுமதித்தனர். நேற்று மாலை 4 மணிவரை 5 ஆயிரம் பக்தர்கள் மலைக்கு சென்றனர். எதிர்பார்த்ததைவிட ஏராளமான பக்தர்கள் சென்ற தால் வழக்கம்போல்
அமாவாசை பூஜைகள் உற்சாகத்துடன் நடந்தன.