வாழப்பாடி: தமிழகத்தில், 37, இந்து கோவில்களில், தங்கத் தேர் வடிவமைத்து கொடுத்த, மதுரையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞரை, பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரையை அடுத்த, புதுார் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் மகன் ரகுமான், 42. இவருக்கு, ஜமீலா, 35, என்ற மனைவியும், முஜிபா என்ற மகளும், சிராஜ் என்ற மகனும் உள்ளனர். இவரது தந்தை, தேர் வடிவமைக்கும் ஸ்தபதி என்பதால், மாமல்லபுரத்தில் உள்ள நுண்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரியில், ரகுமானை சேர்த்துள்ளார்.
சிற்பக்கலை பட்டம்: சிறு வயதில் இருந்தே, தேர் வடிவமைப்பதில் ஆர்வம் கொண்ட அவர், தந்தையுடன் இணைந்து, திருத்தேர் அமைக்கும் பணிகளை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, சிற்பக்கலை பட்டம் பெற்று, தங்கத்தேர் சிற்ப வடிவமைப்பில் தேர்ச்சி பெற்று, சிறந்த ஸ்தபதியாக உருவெடுத்துள்ளார்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்து கோவில்களுக்கு, தங்கத் தேர் வடிவமைக்கும் பணியை செய்து வருகிறார். தமிழகத்தில், பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர், நாமக்கல் ஆஞ்சநேயர், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உட்பட, இதுவரை, 36 கோவில்களுக்கு, தங்கத் தேர் வடிவமைத்து கொடுத்து, ரகுமான் அசத்தியுள்ளதை, பலரும் பாராட்டிவருகின்றனர்.
தற்போது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு, அவரது கைவண்ணத்தில், 37வது தங்கத்தேரை, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைத்து கொடுத்துள்ளார். திருநள்ளாறு, சனீஸ்வர பகவான் திருக்கோவிலுக்கும், அவர், தங்கத்தேர் வடிவமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ஸ்தபதி ரகுமான் கூறியதாவது: இதுவரை, பிரசித்தி பெற்ற, 37 கோவில்களுக்கு தங்கத்தேர் வடிவமைத்து கொடுத்துள்ளேன். மதம் எதுவானாலும், இறைபணி செய்வதை, எனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். தேர் வடிவமைக்கும் பணியில் ஈடுபடும் போது, காவி வேட்டி அணிந்து கொள்வதோடு, அசைவம் உண்பதையும் தவிர்த்து விடுவேன்.
திருநீறு பூசுவேன்: கோவில்களில் பூஜிக்கும் போது வழங்கப்படும் விபூதியை, பயபக்தியோடு நெற்றியில் பூசிக் கொள்வேன். இந்து மத ஆகம விதிப்படி, சடங்கு சம்பிரதாயங்களுக்கு, உரிய மதிப்பளித்து, தங்கத்தேர் வடிவமைக்கும் பணியை செய்து வருவது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.