ஐ.பி.எல் ஊழலில் சிக்கி, இங்கிலாந்து நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் லலித்மோடிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியது குறித்து காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ப.சிதம்பரம் கேட்டுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் மத்திய அரசை நிலைகுலைய செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து ப.சிதம்பரம் கேட்டுள்ள கேள்விகள் வருமாறு:
1. சுஷ்மா ஸ்வராஜை லலித்மோடி தொடர்பு கொண்ட போது, இந்திய தூதரை அணுகும்படி லலித்மோடியிடம், சுஷ்மா ஸ்வராஜ் ஏன் கூறவில்லை?
2. லலித் மோடிக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு முடிவு எடுத்தது யார்?
3. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், லலித் மோடி எப்படி இங்கிலாந்தில் தங்கியிருக்கிறார்?
4. லலித்மோடியை திரும்ப அனுப்புமாறு தற்போதைய இந்திய அரசு ஏன் வற்புறுத்தவில்லை?
5. இதுதொடர்பாக இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான கடித விவரங்களை மத்திய அரசு ஏன் வெளியிடவில்லை
ப.சிதம்பரத்தின் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சுஷ்மா ஸ்வராஜும், மத்திய அரசும் திணறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விவகாரம் குறித்து ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “‘அமலாக்கத்துறையின் பரிந்துரை காரணமாக கடந்த 2010ம் ஆண்டு லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. மேலும், இங்கிலாந்து அரசுடன் ஆலோசித்த பிறகே லலித் மோடி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காங்கிரஸ் அரசு லலித்மோடியை புண்படுத்தியதாக கூறுவதை ஏற்க முடியாது. அதேபோல், லலித் மோடி விவகாரத்தின்போது மன்மோகன் சிங் அமைதியாக இருந்ததாக கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. லலித் மோடி விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றஞ்சாட்டுவது நகைப்புக்குரியது” என்று கூறியுள்ளார்