மேல்சபை தேர்தலில் எம்.எல்.ஏ ஒருவரின் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சித்த வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மிரட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று சந்திரசேகர ராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேல்சபை தேர்தலில் ஓட்டுக்கு கோடிகள் கொடுத்த லஞ்ச வழக்கை திசை திருப்ப சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இந்த வழக்கில் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த காரியத்தையும் தெலுங்கானா அரசு செய்யாது.
சட்டப்படித்தான் அனைத்து விசாரணையும் நடக்கிறது. இது சந்திரபாபு நாயுடுவின் சொந்த பிரச்சனை. ஆனால் இதனை இரு மாநில பிரச்சனை போல் சந்திரபாபு நாயுடு சித்தரிக்க பார்க்கிறார்.
ஆந்திர மக்கள் புத்தசாலிகள். அவர்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். எனது ஓராண்டு ஆட்சியில் தெலுங்கானாவில் உள்ள ஆந்திர மக்கள் தாக்கப்பட்டதாக எந்த புகாரும் இல்லை. ஆந்திரா – தெலுங்கானா மக்கள் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். அவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்த சந்திரபாபு நாயுடு முயற்சிக்கிறார்.
லஞ்ச வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது. அவரை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு காப்பாற்ற முயற்சி செய்யாது. ஏனெனில் ஊழலற்ற ஆட்சியை அமைப்பேன் என்று கூறிதான் மோடி ஆட்சியை பிடித்தார். அதனால் ஊழல் பிரச்சனையில் சிக்கியுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மோடி ஆதரவளிப்பார் என்று நான் கருதவில்லை