நிதி மோசடி புகாரில் சிக்கி இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள, தேடப்படும் குற்றவாளி என கூறப்படும் லலித் மோடிக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக பா.ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்ஸி வரும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள கருத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எல்.கே.அத்வானி அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலவரப்படி, அரசியல் அமைப்பு மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் மிகவும் வலிமையாக இருப்பினும் படைகள் ஜனநாயகத்தை காக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸி தொடர்பான சூழ்நிலையை தடுக்க போதுமான சட்டரீதியான பாதுகாப்புகள் எதுவும் கிடையாது. நாட்டில் மீண்டும் அவசரநிலை ஏற்படாது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.
இன்று, அரசியல் தலைமை முதிர்ச்சி அடையவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனது பலவீனம் காரணமாக, நாட்டில் எமர்ஜென்ஸி மீண்டும் ஏற்படாது என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது” என்று கூறியுள்ளார்.