காதில் அழுக்கு எடுப்பது நல்லது என்று சிலர் காது குடைகிறார்கள். உண்மையில் அது அழுக்கு அல்ல. பாதுகாப்புக்காக காது சுரக்கும் மெழுகு. காது குடையும் போது, மெழுகு மேலும் உள்ளே தள்ளி, பெரிய அழுக்கு உருண்டைகளாக மாறிவிடும். ஏதேனும் பிரச்னை எனில், மருத்துவரிடம் சென்று, காதைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
காதின் உள்ளே 23 மில்லி மீட்டர் தூரத்தில் சவ்வு இருந்தாலும், சாதாரணமாகக் கன்னத்தில் விழும் அறையின் சத்தத்தில்கூட சவ்வு கிழிய வாய்ப்புகள் உண்டு. எனவே, சாவி, ஹேர்பின், கம்பி, குச்சி, பட்ஸ் போன்றவற்றை வைத்து, காதைக் குடைந்தால், காதில் உள்ள சவ்வு கிழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இயர்போனின் நுனி, காதில் உள்ள கார்டிலேஜ் எலும்புகளை அழுத்துவதால் எலும்புகள் பாதிக்கப்படலாம். இதனால், உள்ளிருக்கும் மென்மையான பகுதிகளில் வீக்கம், கொப்புளங்கள் ஏற்படலாம். இயர்போன்களை 20-30 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
டி.வி, தியேட்டர், செல் போன், மியூசிக் சிஸ்டம் போன்ற எதையும் அதிக சத்தத்துடன் கேட்கக் கூடாது. அதிக சத்தத்தால், காதில் உள்ள ஹேர் செல்கள் (Hair cells) பாதிக்கும். தொடர்ந்து அதிக சத்தமான சூழலில் இருந்தால் காது செவிடாகலாம்.
காது வலி வந்தால், உடனே காதுக்கான சொட்டு மருந்தைப் பயன்படுத்தக் கூடாது. இதனால், காதில் பூஞ்சைகள் உருவாகும். காது வலிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே சரி.
கிராமப்புறங்களில் சிலர், காதிலிருந்து அழுக்கு எடுக்கும் கைவைத்தியத்தைச் செய்கின்றனர். அதுபோல், குழந்தைகளை மடியில் போட்டு அழுத்தி, காதில் இருக்கும் அழுக்கை எடுக்கின்றனர். இது மிகவும் தவறான செயல். இதனால், காதின் மெல்லிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இரவு நேரத்தில் பேருந்து, டூவீலர் மற்றும் ரயிலில் பயணிக்கும்போது, காதில் பஞ்சு வைத்துக்கொள்வது நல்லது. ‘சில்’லென்ற காற்று தொடர்ந்து காதில் பட்டால், ‘முகவாதம்’ வரலாம். இதனால், பாதி முகம் பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடும்.
பூச்சி, வண்டு, எறும்பு ஏதேனும் காதில் புகுந்துவிட்டால், உடனடியாக சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காது நிரம்பும் வரை ஊற்றலாம். பூச்சி இறப்பதற்குத் தண்ணீரைவிட தேங்காய் எண்ணெயே பாதுகாப்பானது. இதை, முதலுதவியாக இதைச் செய்த பின், மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
காதின் கதகதப்பு பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல். எனவே, நீச்சல் குளம், கிணறு, ஏரி, ஆறு, கடல் போன்ற இடங்களில் குளிப்பவர்கள், காதில் இயர் பிளக் (Ear plug) மாட்டிக்கொண்டு நீந்தலாம். இதனால், காதில் தண்ணீர் புகுந்துகொள்வதும், தண்ணீரால் தொற்று ஏற்படுவதும் தடுக்கப்படும்.
நாம் சாப்பாட்டை மெல்லும்போது ஏற்படும் அசைவுகளால் சிறிதளவு அழுக்குகள் தானாகவே நகர்ந்து வெளிவந்துவிடும். உணவை நன்றாக மென்று விழுங்கும் பழக்கத்தால், காதில் அதிக அழுக்கு சேர்வதைத் தடுக்க முடியும்.