ராகுல்காந்தியின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

c3eabbfc-d4c7-49b8-a85d-3e9c1595b12c_S_secvpfபொதுவாக பிறந்த நாளின்போது டெல்லியில் இல்லாமல் பெரும்பாலும் வெளிநாடுகளில் பிறந்தநாளை கொண்டாடும் வழக்கத்தை உடைய ராகுல்காந்தி நேற்றைய 45வது பிறந்த நாளை காங்கிரஸ் தொண்டர்களின் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்ச்சி கொண்டதாக கூறப்படுகிறாது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பிய ராகுல்காந்தியின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் தெரிவதாக காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ராகுல்காந்தி கட்சி பணிகளையும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களையும் தீவிரமாக செய்து வருவதாகவும்,  அவருடைய பிரசாரத்தில் அனல் பறப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல முன் எப்போதும் இல்லாத வகையில் ராகுல்காந்தியின் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக தலைநகர் டெல்லியில் விரிவான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருந்தனர் இதையடுத்து நேற்று அவருடைய பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நேற்று காலை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியின் வீடு அமைந்துள்ள துக்ளக் லேன் பகுதிக்கு காரில் சென்றார். அங்கு வீட்டுக்கு வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். வீட்டுக்குள் ஜெகதீஷ் சர்மா தலைமையிலும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். பின்னர், ராகுல்காந்தி, தனது தாயாருடன் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது வீட்டுக்கு வெளியே குவிந்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், மலர்களைத் தூவியும் மகிழ்ந்தனர்.

இதன்பின்பு ராகுல்காந்தி கார் மூலம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய அவர், இனிப்புகளையும் வழங்கினார். வெள்ளைநிற உடை அணிந்து வந்திருந்த ஏராளமான சேவா தள தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ராகுல் காந்தியின் 45-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 45 கிலோ எடை கொண்ட கேக் ஒன்றையும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்கு எடுத்து வந்திருந்தனர்.

ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து டுவிட்டரில், ‘‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார். இந்த வாழ்த்தை ஏற்று கொண்ட ராகுல்காந்தி, மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply