எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களும் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். பெண் வேடத்தில் நடிக்காத முன்னணி நடிகர்களே இந்தியாவில் இல்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். அதுவும் கமல் நடித்த ‘அவ்வை சண்முகி’ போன்று படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பெண் வேடத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக இருந்த பாக்யராஜ் என்பவர் இயக்கும் படத்தில்தான் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெண் வேட மேக்கப் போட வெளிநாட்டில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவுள்ளனர். முக்கியமாக ஹாலிவுட்டில் லார்ட் ஆப் தெ ரிங்ஸ்’ படம் உள்பட பல படங்களில் பணிபுரிந்த சீன் புட் என்பவர் இந்த படத்தின் மேக்கப் கலைஞராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்தான் ‘ஐ’ படத்திற்காக விக்ரமுக்கு மேக்கப் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.