ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா சமீபத்தில் தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் அதிமுக வேட்பாளராக நிற்கின்றார். இந்த தொகுதியில் வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை அடுத்து நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா பேசியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம்.கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேலை, எனது வேண்டுகோளை ஏற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.
இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல். பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இப்போது நானே இங்கு போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரை தோற்கடிப்பது என்பது வேறு. ஆனால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம்.
மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்னையும், அதிமுகவையும் வெல்ல முடியாது என்பதால்தான், எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. ஆனால், அதற்கு பல கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.
பிறரின் குறைகளைச் சொல்லி வாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை. நாங்கள் செயல்படுத்திய சமூகநல, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை கேட்கவே வந்திருக்கிறேன்.
20 கிலோ விலையில்லா அரிசி, ரூ. 25-க்கு லிட்டர் பாமாயில், ரூ. 30-க்கு கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தாலிக்கு தங்கத்துடன் ரூ. 50,000 திருமண உதவி, கட்டணமில்லா கல்வி, ஆண்டுக்கு 4 பள்ளிச் சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ரூ. 1,000 ஓய்வூதியம், அரசு கேபிள்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வசதி, தாய்- சேய் நலம் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்துப் பயணம், மகப்பேறு உதவி, அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா மருந்தகங்கள், அம்மா சிமென்ட், அம்மா உப்பு, மக்களை நாடிச் சென்று குறைகளைத் தீர்க்கும் அம்மா திட்டம் என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 4,992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம். இதனால் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறோம். ரூ. 41 கோடியில் துணை மின் நிலையப் பணிகள் நடந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் 14,313 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக ரூ. 101 கோடியில் 1,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
ரூ. 25 கோடியில் 254 உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ. 17 கோடியில் 205 உட்புறச் சாலைகள் புதுப்பிக்கப்படவுள்ளன. கத்திவாக்கம் நெடுஞ்சாலை – ரயில்வே சந்திப்பில் ரூ. 12 கோடியில் மேம்பாலப் பணிகள், ரூ. 3.30 கோடியில் மீனம்பாள் நகரில் மகப்பேறு மருத்துவமனை ஆகிய பணிகள் முடியும் நிலையில் உள்ளன. 22,144 கர்ப்பிணிகளுக்கு ரூ. 8.86 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. 11,106 நோயாளிகளிகளுக்கு ரூ. 19.89 கோடியில் முதல்வரின் விரிவான பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
44,596 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படும். 32,609 பேர் ரூ. 1,000 மாத ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 14 புதிய வழித்தடங்களில் 36 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொகுதியில் மட்டும் 10 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.
ஆர்.கே.நகரில் ரூ. 2.77 கோடியில் 10 குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 236 தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. ரூ. 242 கோடியில் மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சாலைகள் அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ. 36 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி ஏராளமான பணிகளை ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறோம்.
இங்கே, என்னை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் போட்டியிடுகிறார். இதே கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் என்னையும், அதிமுக அரசையும் பாராட்டி பேசியுள்ளனர். அக்கட்சியின் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், ‘‘அம்மா உணவகம் ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்’’ என்றும், அக்கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான எஸ்.குணசேகரன், ‘‘திறமையான கல்வி கற்க பல்வேறு சலுகைகளை அதிமுக அரசு அளித்துள்ளதாகவும்’’ சட்டப்பேரவையில் என்னைப் பாராட்டி பேசியுள்ளனர். ஆனால், இன்று என்னை எதிர்த்து போட்டியிடுவதால் வேறு வழியின்றி எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்கா எப்போதும்போல பாடுபடுவேன்.
எங்களது சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.