ரம்ஜான் நோன்பின்போது பசி தாங்காமல் உணவு சாப்பிட்ட இரண்டு சிறுவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தூக்கிலிட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிரியா மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் நேற்று சிரியா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்லாமிக் அரசு பகுதியில், இரண்டு சிறுவர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் பகல் நேரத்தில் உணவு சாப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பல்வேறு கடுமையான தண்டனை முறைகளை குற்றவாளிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.இதில் பல்வேறு அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், ரம்ஜான் நோன்பு காலத்திலும் இது போன்று தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சிரியாவின் டீர் எசூர் மாகணத்தில் உள்ள மயாடீன் கிராமத்தில் வசிப்பவர்கள் காவல் நிலையத்தில், 18 வயதிற்கு உட்பட்ட இரண்டு இளைஞர்கள் தூக்கிலிடப்பட்ட தகவலைக் கூறியுள்ளதாக மனித உரிமை பிரதிநிதி ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.