தமிழகத்தில் நிலவும் கையேந்தி கலாச்சாரத்தை துரத்தியடிக்க வேண்டும். ராமதாஸ்

ramdossதினந்தோறும் தமிழக அரசை விமர்சனம் செய்து அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாமக நிறுவனர் ராம்தாஸ் இன்று சற்று ஆக்ரோஷமாகவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் காவல்துறை மற்றும்  மாஃபியா ஆட்சிதான் நடைபெறுகிறது என்று அவர் வெளியிட்டிருக்கும் சூடான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

” இந்தியா முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நாளையுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நெருக்கடி நிலை என்ற இந்திய ஜனநாயகத்தின் கருப்புப் பக்கங்கள் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-26 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் தான்  எழுதப்பட்டன. அப்போது இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ஃபக்ருதின் அலி அகமது அப்போதைய  பிரதமர் இந்திரா காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தின் 352-ஆவது பிரிவைப் பயன்படுத்தி இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதற்கான மூன்று வரிகள் கொண்ட சுருக்கமான ஆணையில் கையெழுத்திட்டதில் தான் அனைத்தும் தொடங்கின.

இந்திரா காந்தியும் காங்கிரசில் இருந்த அவரது துதிபாடிகளும் கொண்டு வந்த நெருக்கடி நிலை இந்திய ஜனநாயத்தை சர்வாதிகாரமாக மாற்றியது. தனிநபர் சுதந்திரமும், தனியுரிமைகளும் பறிக்கப்பட்டன; குடிமக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன; கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது; கொடுமையான சட்டங்களின்படி லட்சக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் நிர்வாக அமைப்புகளாக போற்றப்படும் குடியரசுத் தலைவர் அலுவலகம், நாடாளுமன்றம், மத்திய அமைச்சரவை, உயர் நீதித்துறை, குடிமைப் பணிகள் ஆகியவற்றின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரம் காணாமல் போய்விட்டது.

இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் பற்றி அண்மையில் விளக்கிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது நெருக்கடி நிலை காலத்தில் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தப்பட்டத் தாக்குதலை விட மோசமானது என்று கூறினார். அதுமட்டுமின்றி, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின்படி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றையும் தாண்டி நமது ஜனநாயகத்தை நசுக்கக்கூடிய சில சக்திகள் மிகவும் வலிமையாக இருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் அத்வானி வெளியிட்டார். நெருக்கடி நிலை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர்களில் ஒருவரான அத்வானியிடமிருந்து வந்திருக்கும் இந்த எச்சரிக்கை வார்த்தைகள் மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.

நெருக்கடி நிலை என்ற பெயரில் தாம் செய்த ஜனநாயகப் படுகொலை மற்றும் உரிமைப் பறிப்புகளை நியாயப்படுத்துவதற்காக, ‘சுதந்திரத்தைவிட சுட்ட ரொட்டி மிகவும் முக்கியமானது’ என்ற வாதத்தை இந்திரா காந்தி முன்வைத்தார். வயிற்றுக்கு உணவு கிடைக்கும் வரை மக்கள் அடிமைகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் வாழலாம் என்பது தான் இந்திரா காந்தி முன்வைத்த வாதத்தின் பொருளாகும். ஆனால், 1997 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வாதத்தை நிராகரித்த மக்கள் வலிமைமிக்க இந்திராவையும், அவரது காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி, ஆட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கி எறிந்தனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழக ஆட்சியாளர்களும், அவர்களின் கட்சிகளும் மக்களை இன்னும் மோசமாக நடத்துவதுடன், தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசுகள்,  இலவசங்களை வழங்கியும், தெருவுக்குத் தெரு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தும் தமிழக மக்களை பிச்சைக்காரர்களாகவும், குடிநோயர்களாகவும் மாற்றி விட்டன. அரசு எந்திரம் மற்றும் ஆளுங்கட்சியிடம் பழகும்போது தங்களின் கண்ணியம், மானம், சுயமரியாதை ஆகியவற்றை மக்கள் இழக்க நேரிடுகிறது.

ஆளுங்கட்சியின் அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், தொண்டர்களும் கண்ணியமான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை; மாறாக துதிபாடிகளாகவும், அடிமைகளாகவுமே சித்தரிக்கப் படுகின்றனர். இவை அன்றாட வாடிக்கையாகிவிட்டன. அதுமட்டுமின்றி, அவர்களின் ‘இதய தெய்வம்’  ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து இது மேலும் மோசமாகிவிட்டது. இந்த கேலிக்கூத்துக்களை எல்லாம் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களாக இல்லாத 80% மக்களிடம் திணிக்கவும் முயலுகின்றனர். பெருமளவிலான ஏழை மற்றும் சாதாரண மக்கள் இலவசங்களை  வாங்குவதாலும், அவர்கள் அரசு மதுக்கடைகளில் மதுவை அருந்துவதாலும் அவர்களுக்கு கண்ணியம், மானம், மரியாதை போன்றவை தேவையில்லை என்று சர்வாதிகார மனப்பான்மையும்,  அகந்தையும் கொண்ட தமிழக ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய மனப்போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.

‘‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்’’ என்ற குறளின் மூலம் உயிரை விட மானமே பெரியது என்று வலியுறுத்திய திருவள்ளுவரும், சோற்றை விட சுயமரியாதை தான் முக்கியம் என்று வெளிப்படையாக முழங்கிய தந்தை பெரியாரும், கண்ணியம் தான் திராவிட இயக்கத்தின்  அடையாளம் என்று கூறிய பேரறிஞர் அண்ணாவும் வாழ்ந்த தமிழகத்தில் தான் இவை அரங்கேற்றப்படுகின்றன என்பது வருத்தமளிக்கிறது. பொதுவாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், குறிப்பாக அ.தி.மு.க.வின் ஆட்சியில் கண்ணியம், மானம், மரியாதை ஆகியவற்றின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது முரண்பாடுகளின் உச்சம் ஆகும். ஜனநாயகத்தின் அடையாளங்களான சுதந்திரமும், உரிமைகளும் இந்த ஆட்சிகளில் முடக்கப்படுகின்றன. தமிழகத்தில் கிட்டத்தட்ட காவல்துறை மற்றும் மாஃபியா ஆட்சி தான் நடைபெறுகிறது. ஜனநாயகம் மற்றும் அதன் மாண்புகளுக்கு  பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எழுபதுகளின் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் நிலவியதை விட மிகவும் மோசமான சூழல் தமிழகத்தில் இப்போது நிலவுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் என்ற ஒன்று நிலவுகிறதா? என்ற ஐயம் அடிக்கடி பலருக்கும் ஏற்படுகிறது.

இந்த நிலை இனியும் தொடர்வதை அனுமதிக்கலாமா? இத்தகைய சூழலில் உண்மையான வளர்ச்சியோ, சமூக நீதியோ, சமத்துவமோ நிலவ வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இது இந்த தாயகத்தின் சுதந்திரமான, மரியாதைக்குரிய குடிமக்கள்  என்ற வகையில் அவர்களின் எதிர்காலம் சார்ந்த ஒன்றாகும். இந்த அவல நிலை மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வெகுவிரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் அடிமை மற்றும் கையேந்தும் கலாச்சாரத்தை துரத்தியடித்து, நமது மூதாதையர்கள் காட்டிய கண்ணியம், மானம் மற்றும் சுயமரியாதைக் கலாச்சாரத்தை மீண்டும் ஏற்படுத்துவது எப்படி? என்பதை சிந்தித்து செயல்படுத்துவதற்கான காலமும், நேரமும் வந்துவிட்டது”

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply