சர்வாதிகார ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. அத்வானிக்கு பதிலடி கொடுத்த அருண்ஜெட்லி

arun jaitleyகடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்ஸி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு சொல்வதாகவே கூறப்பட்ட நிலையில் மோடியின் தரப்பில் இருந்து இதுவரை இதற்கு பதிலில்லை. இந்நிலையில் மோடியின் சார்பில் அருண்ஜெட்லி தற்போது இந்த கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அருண்ஜெட்லி அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்து சர்வாதிகாரத்தை ஏற்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் சில விதிமுறைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. அதாவது நிர்வாகம், காவல் துறை, ஊடகங்கள், நீதித்துறை ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்களும் சீர்குலையும்போது நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

ஆனால் இன்று உலகம் முழுவதுமே ஜனநாயகத்தின் மீதான விழிப்புணர்வு அதிகம் காணப்படுகிறது. சர்வாதிகார நாடுகளின் மீது விதிக்கப்படும் பல்வேறு தடைகளும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்து இருக்கின்றன. இன்று ஊடகங்களும் மிகவும் வலிமையாக இருக்கின்றன என்று கருதுகிறேன். இதேபோல் நிர்வாக முறைகளும் வலிமையாக உள்ளன. உலக நிறுவனங்களும் பலத்தை கொண்டிருக்கின்றன.

அதனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு சர்வாதிகார நாடாக மாறுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது. எனவே, நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் அரசு 1975 ஆம் ஆண்டு அறிவித்த நெருக்கடி நிலை பிரகடனம் சுதந்திர இந்தியாவின் இருண்ட காலம் ஆகும்”

இவ்வாறு அருண்ஜெட்லி தனது பேட்டியில் கூறினார்.

Leave a Reply