பள்ளிக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் உள்பட உணவுப்பொருட்கள் வாங்கியதில் ரூ.206கோடி ஊழல் செய்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை பெண் அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய மத்திய மாநில அமைச்சர்கள் புதுப்புது விதத்தில் ஊழல்கள் செய்வது எப்படி என்பதை கண்டுபிடித்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்கின்றார்களோ இல்லையோ, ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகிவருகின்றது. ஆண் அமைச்சர்களுக்கு நிகராக பெண் அமைச்சர்களும் ஊழலில் ஈடுபடுவது பெரும் வருத்தத்தை வரவழைக்கின்றது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சரும் மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் மகளுமான பங்கஜா முண்டே மீது ரூ.206 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது அமைச்சர் பதவிக்கு தொடர்ந்து நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 லட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கும்போது டெண்டர் கோர வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருக்கும் நிலையில், அந்த விதியை மீறி 24 ஒப்பந்தங்களுக்கு ஒரே நாளில் பங்கஜா முண்டே அனுமதி அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. மேலும் பங்கஜா முண்டே மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அமைச்சர் பங்கஜா முண்டே, “குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் முறைகேடு செய்யவில்லை என்றும் டெண்டர் விட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் எனவே டெண்டரை ரத்து செய்து விட்டு மீண்டும் ஏலம் விடுவது என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும், தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் என் மீது குற்றம் சாட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.