ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதால், ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வெற்றி பெற்றாலும் ஒரு மாதத்தில் மீண்டும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், “’கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்த போதே இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல, இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருத்து தெரிவித்தது.
தற்போது கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. மேல்முறையீடு செய்ததோடு ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தால், ஜெயலலிதா ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஒருவேளை வெற்றி பெற்றால் கூட மீண்டும் பதவி இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில் ‘’ ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் செய்கின்ற போது ஜெயலலிதா இடதுசாரி கட்சிகளை விமர்சித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பாக மாநில அரசின் நலத்திட்டங்களை வரவேற்று பேசியதாக கூறி, அன்று வரவேற்று பேசியவர்கள் இன்று என்னை எதிர்க்கலாமா? என்று கேட்டிருக்கிறார்.
மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் நல திட்டங்களை கொண்டு வரும்போது நாங்கள் அதை ஆதரிப்போம். அதே நேரத்தில் ஊழல் செய்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்’ என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.