விஜயகாந்த் மைத்துனர் மீது பிடிவாரண்ட் ஏன்? திடுக்கிடும் தகவல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு ஒன்றை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘நரசிமா’ என்ற படத்தின் நெல்லை மாவட்ட உரிமையை பெற்ற மாரியம்மாள் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். நரசிம்மா படத்தை நெல்லை மாவட்டத்தில் வெளியிட்ட தனக்கு ரூ.26 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், நஷ்டம் ஏற்பட்டால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இருவரும் நிறைவேற்றவில்லை என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜகாந்தை இந்த வழக்கில் இருந்து விடுவித்துவிட்டது.
ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் சுதீஷ் கடந்த ஜூன் 11 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் தொடர்ந்து ஆஜராகாததால் அவர் மீது தற்போது பிடிவாரண்ட்டை நீதிபதி பிறப்பித்துள்ளார்.