‘சிறுதானியம் சாப்பிட்டால் கேன்சர் வராது!’

images (4)

”மனச்சிக்கலும், மலச்சிக்கலும் இல்லாமல் இருந்தாலே உடல் ஆரோக்கியமாய் இருக்கும். மலச்சிக்கல் வராமல் இருக்க வேண்டுமென்றால் சரிவிகித உணவுடன் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை தினசரி உணவுடன் சேர்த்துக் கொள்வது அவசியம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறோம்?

30 ஆண்டுகளுக்கு முன் ஏழைகளின் உணவு என்று பெயரிடப்பட்ட சிறுதானியங்கள்தான் இன்று உயர் ரக உணவாக மாறியிருக்கிறது. அதிலும் இந்த சிறுதானியங்கள் வெறும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருவதை நான் இங்கே கண்டிப்பாக மறுத்தாக வேண்டும்” – சிறுதானியங்கள் குறித்த தகவல்களுடன் பேசுகிறார் டயட்டீசியன் கிருஷ்ணமூர்த்தி.

”ஒருவருக்கு மரபு ரீதியிலாக சர்க்கரை நோய் வந்திருந்தால் கூட சிறுதானியங்கள் சாப்பிடுவதன் மூலம் அந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் மட்டுமில்லாமல் 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சிறுதானியங்களை சாப்பிடலாம். இந்த சிறுதானியங்கள் என்பவை வறட்சி பகுதியில் கூட செழித்து வளரக் கூடியவை. இதற்கு தனிப்பட்ட வகையில் செயற்கை உரங்கள் தெளிக்க தேவையில்லை. அதனால்தான் இந்த சிறுதானியங்களை இயற்கை உணவு என கொண்டாடி வருகிறார்கள்.

முன்பெல்லாம் அதிகபட்ச வேலைகள் செய்யக் கூடிய விவசாயிகள், உழைப்பாளிகள் சிறுதானியங்களை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு வந்தனர். அதனால்தான் அவர்கள் திடகாத்திரமாக இருந்தனர். அரிசியின் ஆதிக்கம் வந்தபிறகு நம்மவர்கள் பலரும் இத்தகைய உணவுகளை மறந்து போனார்கள் என்பதே உண்மை. இப்போது சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமையை தவிர்த்து வேறு மாற்று உணவு இல்லை என்பதாலே இந்த சிறுதானியங்கள் சமீபமாக பிரபலப்படுத்தபட்டு வருகிறது. இது உண்மையில் வரவேற்கத்தக்க ஆரோக்கியமான விஷயம்” என்றவர், சிறுதானியங்களால் ஏற்படக் கூடிய நன்மைகளை நம்மிடம் பட்டியலிட்டார்.

”சாமை, தினை, வரகு, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் கால்சியம், மெக்னீசியம் பி-காம்பிளக்ஸ் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை தரக் கூடிய நிறைய சத்துக்கள் இருக்கின்றன. இந்த சிறுதானியங்களை இயற்கையாகவே பாதுக்காக்க கூடிய மேற்புறத்தோலான உமி இருப்பதால் சிறுதானியங்களை நன்கு காய வைத்து சரியான முறையில் பாதுகாக்கும் போது கண்டிப்பாக பாக்டீரியாக்கள் இந்த உணவை அணுகவே அணுகாது. இதயத்துக்கு மிகுந்த பயன் தரக்கூடியது. அதேபோல், இவைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சீரணத்துக்கு உதவுவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும்.

இதயத்துக்கு தீங்கு செய்ய கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை உடலுக்குள் சேரவிடாது. தொடர்ந்து சிறுதானியங்களை சமச்சீர் உணவுடன் எடுத்துக் கொள்பவர்களை கேன்சர் அண்டவே அண்டாது. அதேபோல் சிறுநீரக கோளாறு வராமல் பாதுகாக்கும். பெண்களுக்கு மாதவிடாயை ஒழுங்குப்படுத்தும். பித்தப்பையில் கற்கள் சேராமல் இருக்க உதவும். இந்த சிறுதானியங்கள் குறித்து இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்” என்றவர் அவற்றை சாப்பிடும் முறை குறித்து சொல்லும் போது,

”வெறுமனே அரிசியை சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை. தினம் ஒரு சிறுதானிய உணவை நம் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி காய்கறிகள் பழங்களுடன் சேர்த்து சரிவிகித உணவாக சேர்த்து சாப்பிடுவது அவசியம். 6 மாத குழந்தைக்கு பாலுடன் இணை உணவாக, முளைக்கட்டி காய வைத்து அரைத்த சிறுதானிய கஞ்சியை கொடுக்கலாம். பெரும்பாலான பால்பவுடர் கம்பெனிகள் இந்த வேலையை செய்து தான் குழந்தைகளுக்கான உணவை டின்களில் தயார் செய்து விற்கிறார்கள். அதை நாம் வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சிறுதானியங்களை வெறுமனே எடுத்துக் கொள்ளாமல் பருப்பு, அரிசியையும் சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் சிறுதானிய உணவுடன் அசைவம் சேர்த்து சாப்பிடலாமா என்று கேட்டால் கண்டிப்பாக சாப்பிடலாம். இந்த சிறுதானியங்களில் இருக்கும் நார்ச்சத்து தேவையற்ற கொழுப்பை உடலில் சேர விடாமல் வெளியேற்றி விடும். அதனால் சிறுதானியங்களுடன் அசைவம் எடுக்கும் போது கூடவே காய்கறிகள் பழங்கள் இவற்றை சாலட்டுகளாக எடுத்துக் கொள்வது உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாது. இப்படி சிறுதானியங்களை பற்றி விடிய விடிய பேசிக் கொண்டே போகலாம்” என்கிறார் முத்தாய்ப்பாக!

*நீங்கள் சிறுதானிய உணவுக் குறித்த செழிப்பான தகவல்களை திகட்ட திகட்ட நுகர்வதுடன், நாவுக்கும் வயிற்றுக்கும் ஆரோக்கியத்தை சேர்க்கக் கூடிய சிறுதானிய விருந்தை சுவைத்து மகிழ, வரும் சனிக்கிழமை ஜூன் 27ஆம் தேதியன்று சென்னை, அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடக்கும் நல் உணவு ‘சிறுதானிய விருந்து’ நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

Leave a Reply