தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தடை. சரத்குமார் அணி அதிர்ச்சி
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது. நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் நடிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை தள்ளி வைக்க கோரி நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூலை 15ஆம் தேதி புதன் கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் புதன்கிழமை என்பது வேலை நாள் என்பதால், நடிகர்கள் பலர் ஓட்டுப்போட வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் நடிகர் சங்கத்தின் தேர்தலை ஜூலை மாதம் 2வது ஞாயிற்றுக் கிழமை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஜூலை 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்று அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும், நடிகர் சங்கத்தின் தேர்தலை 2 வழக்கறிஞர் கமிஷனர்கள் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் ரத்து செய்யவேண்டும். இந்த
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இது தொடர்பாக பதில் அளிக்க நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நடிகர் சங்கத் தேர்தல் நடத்தும் தேதியை செயற்குழுதான் முடிவு செய்துள்ளது. செயற்குழு முடிவின்படி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டிதில்லை. 3,500 உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே தேர்தல் தேதி, இடத்தை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் விஷால் உள்ளிட்டோர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக நடிகர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வேட்பு மனு இன்று தொடங்க இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.