பிரபல நடிகர் சிவகுமார் ஃபேஸ்புக்கில் எழுதி வந்த தொடர் ஒன்று ஜாதிப்பிரச்சனையை தலைதூக்கும் ஆபத்து இருந்ததால், அந்த தொடரை நிறுத்தி கொள்வதோடு, ஃபேஸ்புக்கில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூர்யா-கார்த்திக் ஆகியோர்களின் தந்தையும் பிரபல நடிகருமான சிவகுமார் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தந்தை பெரியார், ஜான்சி ராணி, வேலுநாச்சியார், முத்துவடுகநாதன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரை பற்றி தொடர் ஒன்றை எழுதி வந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் எழுதிய தீரன் சின்னமலை பற்றிய தொடர் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த தொடரின் கமெண்ட் பகுதியில் ஒருசிலர் சாதி பற்றிய கருத்துக்களை பரிமாறியதோடு சிவகுமாரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனால் மனம் வருத்தம் அடைந்த சிவகுமார் ஃபேஸ்புக் கணக்கில் இருந்து விலகிக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
என்னை மனிதப் புனிதன் என்றோ, வழிகாட்டும் தலைவன் என்றோ, வாரி வழங்கும் வள்ளல் என்றோ, பேரறிவாளன் என்றோ, நடிப்புக்கலை – ஓவியக் கலையில் கரை கண்டவன் என்றோ, பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக்கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை. 70 வயதைத் தாண்டி, முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.
இது சிலருக்குள் உறங்கிக்கொண்டிருந்த வன்மத்தை, சாதி வெறியை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கவும், குடும்பத்தினரை குறைகூறவும், நானே களம் அமைத்துக்கொடுத்ததாக உணர்கிறேன். என் உலகம் சிறியது. அதில் என் வாழ்க்கை மிகவும் எளிமையானது. இது உங்கள் உலகம், உங்கள் சுதந்திரம். நீங்கள் நினைத்தபடி வாழுங்கள். எல்லாரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அதில் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.