ஒரே நேரத்தில் டுவிட்டரில் இருந்து ராஜினாமா செய்த 2 முக்கிய அதிகாரிகள். பெரும் பரபரப்பு
சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் உயர் மட்ட குழு தலைவராக பணியாற்றிய இந்தியர் ஒருவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டுவிட்டர் இணையதளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய டிக் கோச்டோலோ என்பவர் சமீபத்தில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரை தொடந்து அதே நிறுவனத்தில் நிர்வாக மேம்பாட்டு துணைத் தலைவராக பணியாற்றிய ரிஷி கார்க் என்ற இந்தியரும் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இரண்டு முக்கிய அதிகாரிகள் டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிஷிகார்க் தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியபோது, ”டுவிட்டர் வலைதளத்தில் நிர்வாக மேம்பாட்டு துணைத் தலைவராக கடந்த 13 மாதங்களாக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், இன்று எனது பிரியா விடையை நான் தெரிவிக்கவுள்ளேன். நான் பதவியில் இருந்த காலத்தில், எங்களுடைய குழு சிறப்பாக செயல்பட்டு, பல டஜன் கையகப்படுத்தல் விஷயங்களை மிக சாமர்த்தியமாக நடைமுறைப்படுத்தியது. டிக் கோச்டோலோ உங்களது போற்றத்தக்க தலைமை, நகைச்சுவை போன்றவற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.