மேகியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி
மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பு மற்றும் காரீயம் கலந்திருப்பதால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இந்த மேகியை தடை செய்துள்ள நிலையில், மேகியை ஏற்றுமதி செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. மேகியை தடை செய்யாத நாடுகளுக்கு அந்த உணவுப்பொருளை அனுப்ப எவ்வித தடையும் இல்லை என மும்பை நீதிமன்றம் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தடை செய்யப்பட்ட மேகியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி தரக் கோரி மும்பை நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை மேற்கொண்ட நீதிபதி வி.எம். காண்டே மற்றும் பி.பி கோலாப்வாலா அடங்கிய மும்பை உயர் நீதிமன்ற அமர்வு, நெஸ்லே நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்ய சுதந்திரம் இருப்பதாக குறிப்பிட்டது.
அப்போது உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஹமூத் ப்ரச்சா, “நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானதாக இருப்பதாக அவர்களே குறிப்பிட்டனர். அப்படி இருக்கையில், இதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் விரும்பினால் இந்தியாவுக்கு வெளியே தாராளமாக விற்பனை செய்யட்டும்” என்று கூறினார்.
இது குறித்தஅடுத்தகட்ட விசாரணை ஜூலை 14-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நெஸ்லேயின் தாயகம் சுவிட்சர்லாந்து நாடு ஆகும். இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மொத்தம் 27,420 டன் மேகியை தற்போது ஸ்டாக் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.