முதுமையில் ஏற்படும் மறதி நோய் ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளையில் உள்ள நரம்பு செல்கள் தேய்மானம் அடைவதால், அல்சிமர்ஸ் மறதி நோய் ஏற்படுகிறது. இது முதுமையில் ஏற்படும், ஒருவிதமான மறதி நோயாகும். இந்த நோய் வந்தால், சமீபத்திய நிகழ்வுகள் மறந்து போகும். பழக்கப்பட்ட வேலைகளை செய்ய தடுமாறும். முறையாக பேசுவதில் சிரமம் ஏற்படும். கால நேரம் மற்றும் இடங்களை புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படும்.
வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு, திரும்பி வீட்டிற்கு வர வழி தெரியாமல் போகும். வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைக்க நேரிடும். ஒரு செயலை துணிச்சலுடன் செய்வதில் சிக்கல் ஏற்படும்.
இந்த நோய் ஆண்களை விட, பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. தற்போது முதியோர்களின் வாழும் காலம் அதிகரித்துள்ளது. அதனால் இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும். நோயின் தீவிர தன்மையில் இருந்து பாதிக்கப் பட்ட நோயாளிகளை பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்.
பொதுவாக, அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். பாரம்பரியத்தில் தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அல்சைமர் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?
மூளையின் பக்கவாட்டு பகுதி, பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணு குறைபாடு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரபணு குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டு பகுதியிலுள்ள, ரசாயன பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. அதிக குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது.
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
நாற்பது, ஐம்பது வயதை கடந்த பெண்கள் தங்களுக்கு அல்சைமர் பாதிப்பு இருக்கிறதா என அறிய வேண்டும்.
சிறிய விஷயங்களில் கூட அடிக்கடி மறதி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.