பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார் தயாநிதி மாறன்
பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமீன் பெற்றார். இதனால் கைது நடவடிக்கையில் இருந்து அவர் தற்காலிகமாக தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
சன் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனின் சகோதரரும் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 323 பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகும் படி தயாநிதி மாறனுக்கு சம்மன் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் 2011ஆம் ஆண்டு முதல்கட்ட விசாரணை நடந்தது. 2013ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபரில் எனக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. நான் ஒரு அப்பாவி என சிபிஐ அதிகாரிகளுக்கு பல தடவை கடிதம் எழுதியுள்ளேன். இவ்வழக்கு தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்தது.
இது ஒரு சிவில் வழக்காகும். இதுவரை 60 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட ஆவணங்களை சேகரித்துள்ளனர். 4 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வழக்கில் என்னை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படையற்றது. உள்நோக்கம் கொண்டது. குற்றச் சதி அடிப்படையில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில் என்னை கைது செய்வதே சிபிஐயின் நோக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, “மனுதாரருக்கு 6 வாரம் இடைக்கால முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் வழக்கு விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்காவிட்டால், சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு, தயாநிதி மாறன் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.