அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, காரைக்கால் அம்மையாருக்கு சிவபெருமான் காட்சியருளிய நிகழ்வை உணர்த்தும் விதமாக, காரைக்காலில் உள்ள, காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும், வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, மாங்கனி விழா, கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை, பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், காரைக்கால் அம்மையார், -பரமதத்தர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலையில், பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு, இரவு, காரைக்கால் அம்மையார், பரமதத்தர், முத்துப் பல்லக்கில் வீதி உலா வந்தனர். நேற்று காலை, பிஷாடண மூர்த்தி, பஞ்சமூர்த்தி களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. நான்கு திசையிலும், வேத பாராயணங்கள் எதிரொலிக்க, காலை, 9:05 மணிக்கு, பவழக்கால் விமானத்தில், சிவபெருமான் காவி உடை, ருத்ராட்சம் தாங்கி, பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது, சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனிகளை அர்ச்சனை செய்தனர். மேலும், வீடுகளின் மாடிகளில் இருந்து பக்தர்கள் மாங்கனிகளை வீசும் வைபவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், மாங்கனிகளை பிடிக்க போட்டியிட்டனர்.