நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று பெங்களூரில் 2-வது போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் திருஷ் காமினி மட்டும் அபாரமாக விளையாடி 61 ரன்கள் எடுத்தார். இதில், 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
இந்நிலையில் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் காஸ்பெரக் 17 ரன்களுடனும், அன்னா 23 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் நாளை மூன்றாவது போட்டி நடைபெறவுள்ளது.