ஜெயலலிதா நாளை எம்.எல்.ஏ ஆக பதவியேற்பு. பதவியேற்றவுடன் கொடநாடு செல்கிறார்

ஜெயலலிதா நாளை எம்.எல்.ஏ ஆக பதவியேற்பு. பதவியேற்றவுடன் கொடநாடு செல்கிறார்

kodanadசமீபத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளதாகவும் அதன்பின்னர் ஓய்வு எடுக்க கொடநாடு பயணம் செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு அரசு சார்பிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அவற்றில் எம்.எல்.ஏ.வாக பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வது, தொழிலதிபர் அதானி குழுமத்துடன் சூரிய சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது ஆகிய நிகழ்ச்சிகளும் அடங்கும். ஆனால் திடீரென முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டன. மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்தான் கடந்த 1 ஆம் தேதி ஜெயலலிதா பங்கேற்பதாக இருந்த ரமலான் நோன்பு நிகழ்ச்சியிலும் அவர்  பங்கேற்கவில்லை.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா நாளை பகல் 11.50 மணிக்கு கொடநாடு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா கொடநாடு செல்வதால் அவரை வரவேற்க கொடநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரவேற்பு  கொடி தோரணங்கள் கட்டப்பட்டு எஸ்டேட் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. செண்டை மேளம் முழங்க ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் வரவேற்பு கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சுமார் 2 வாரம் தங்கியிருப்பார் என்றும் அங்கிருந்தவாறே அரசுப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

கொடநாடு செல்வதற்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா நாளை காலை செயின்ட் ஜார்ஜ் கோட்டை சென்று எம்.எல்.ஏ.வாக பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் கோட்டையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Leave a Reply