தற்போதைய உலகில் இண்டர்நெட் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இண்டர்நெட் இல்லையென்றால் இனிமேல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளது. ஆனால் இன்னும் இண்டர்நெட்டுக்காக நடுத்தர வர்க்கத்தினர் கொஞ்சம் அதிகமாக செலவு செய்வதாக கருதுகின்றனர். இவர்களின் வசதியை கருதி, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இலவச வைபை திட்டத்தை அந்தந்த பகுதியில் உள்ள அரசுகள் செய்து வருகின்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச இண்டர்நெட் தரும் வசதியை செய்ய கூகுள் முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல் கட்டமாக அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் இருந்து இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.
இண்டர்நெட் உலகில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கூகுள், உலகம் முழுவதும் இலவச வைபை சேவையை கொடுப்பதன் மூலம் கூகுளின் பெயர் இன்னும் அதிகளவு பிரபலமாகும் என்ற நோக்கத்தில் இந்த சேவையை அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இலவச வைபை வழங்குவதன் மூலம் மேலும் அதிக விளம்பரங்கள் இந்நிறுவனத்திற்கு கிடைக்கும், இந்த விளம்பரங்கள் உலகம் முழுவதும் விரைவில் சென்றடையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
விரைவில் இந்த சேவை இந்தியாவில் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.