பிட்யூட்டரி சுரப்பி

p62b

னித உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது ஹார்மோன்கள். மூளைப்பகுதியில் ஹைப்போதலாமஸுக்கு  அருகில், மிகச் சிறிய பட்டாணி அளவுக்கு, அரை கிராம் எடையில் பிட்யூட்டரி சுரப்பி இருக்கிறது.  இதுதான்  தைராய்டு, அட்ரினல், டெஸ்டீஸ், சினைப்பை  சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நான்கு சுரப்பிகளிலும் ஹார்மோன் சுரப்பதில் ஏதேனும் பிரச்னை எனில், பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ஒரு சிக்னல் அந்த சுரப்பிகளுக்குச் சென்று, ஹார்மோன் உற்பத்தி தூண்டப்படும்.

பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதி  ஆன்டீரியர் பிட்யூட்டரி சுரப்பி எனவும், பின்பகுதி  போஸ்டீரியர்  பிட்யூட்டரி சுரப்பி எனவும்  பிரிக்கப்படுகின்றன. ஆன்டீரியர்  பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து அட்ரினோகார்டிகோட்ராபிக் (Adrenocorticotropic (ACTH)), எஃப்.எஸ்.ஹெச் (FSH), குரோத் ஹார்மோன் (GH),  லூட்டினைசிங்  ஹார்மோன் (LH),  ப்ரோலாக்டின், டிசிஹெச் (TSH), ஏடிஹெச்(ADH), ஆக்சிடோசின் (Oxytocin) ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஹைப்போதலாமஸிலிருந்து சுரக்கும் வாசோபிரஸின் ஹார்மோன் போஸ்டீரியர் பிட்யூட்டரி சுரப்பியில் சேமிக்கப்படும்.

அட்ரினோகார்டிகோட்ராபிக் (ACTH)

இது அட்ரினல் சுரப்பியில் இருந்து ஹார்மோன்கள் சுரக்கத் தூண்டும் ஹார்மோன்.

ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH)

இது பிட்யூட்டரியில் இருந்து சுரக்கும் லுட்டினைசிங் ஹார்மோனுடன் சேர்ந்து, இனப்பெருக்க மண்டலங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

குரோத் ஹார்மோன்  (Growth Harmone)

குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. எலும்புகள் சீராக வளரவும், நல்ல உயரம், எடையுடன் வளர்வதற்கும் துணைபுரிகிறது.

லுட்டினைசிங் ஹார்மோன் (Luteinizing hormone)

இனப்பெருக்க மண்டலங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ப்ரோலாக்டின் (Prolactin)

பெண்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு சீராகப் பால் சுரக்க இந்த ஹார்மோன்தான் காரணம். இது சரியாகச் சுரக்கவில்லை எனில், பெண்களுக்குப் பால் சுரப்பதில் பிரச்னை ஏற்படும்.

தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH)

தைராய்டு சுரப்பியைத் தூண்டிவிட்டு தைராய்டு ஹார்மோன்களைச் சீராக சுரக்கவைப்பது இந்த ஹார்மோனின் வேலை.

ஆன்டிடையருட்டிக் ஹார்மோன் (ADH)

உடலில் நீரின் சமநிலைக்கும், அதிகப்படியன நீரை சிறுநீரகம் வழியாக வெளியேற்றுவதற்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கும் துணைபுரியும் ஹார்மோன்.

ஆக்சிடோசின் (Oxytocin)

பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை சீராக வளரவும், விரிந்து கொடுப்பதற்கும் காரணமான ஹார்மோன். சீராகப் பால் சுரப்பதற்கும் உதவுகிறது.

குறைவாக சுரத்தல் (Hypopituitarism)

பிட்யூட்டரி சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனும் நிலை ஹைப்போ பிட்யூட்டரிசம் எனப்படுகிறது. பிறவியிலேயே பிட்யூட்டரி சுரப்பி சரியாக வளரவில்லை என்றாலோ, மூளைப்பகுதியில் ஏதேனும்  தொற்று, கட்டிகள் இருந்தாலோ, அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு போன்றவை பிட்யூட்டரி சுரப்பியைப் பாதித்து இருந்தாலோ ஹைப்போ பிட்யூட்டரிசம் வரக்கூடும். பசியின்மை, திடீர் உடல் எடைக் குறைவு, மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் திடீர் மாறுபாடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சியின்மை, பூப்படைதல் தள்ளிப்போவது போன்றவை ஹைப்போபிட்யூட்டரிசம் பிரச்னையின் வெளிப்பாடு.

பிட்யூட்டரி சுரப்பியிலும் மற்ற சுரப்பிகளிலும் வெளிவரும் ஹார்மோன்களைப் பரிசோதனை செய்து, சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றின் மூலம் கட்டிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்து அதனை அறுவைசிகிச்சை மூலம் நீக்கினால் பலன் கிடைக்கும். சில ஹார்மோன்கள் மருந்துகள் மூலம் கொடுக்கப்படும்.

மன அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பவர்களுக்கு, கார்டிகோஸ்டீராய்டு இரண்டு மடங்காகக் கொடுக்கப்படும்.

பிட்யூட்டரியில் இருந்து அதிக ஹார்மோன் சுரந்தால்?

டி.எஸ்.ஹெச் அதிகம் சுரந்தால், தைராய்டு சுரப்பி அதிகமாக தைராய்டு ஹார்மோனைச் சுரக்கச் செய்யும். இதனால், ஹைப்பர்தைராய்டிசம் பிரச்னை வரும். தலைவலி, பார்வைக்குறைபாடு ஏற்படும். ரத்தப் பரிசோதனை, மூளைப்பகுதியில் எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்து, இதைக் கண்டறியலாம். அதிகம் சுரப்பது உறுதி செய்யபட்டால்,  அறுவைசிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படும்.

அட்ரினல் சுரப்பியைத் தூண்டும் ஏ.சி.டி.ஹெச் ஹார்மோன் அதிகம் சுரந்தால், குஷிங் நோய் (Cushing disease) வரும். திடீரென உடல் எடை கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய் வரும். எலும்புகள் பலவீனமடையும். ரத்தப் பரிசோதனை, எம்.ஆர்.ஐ பரிசோதனை மூலம் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்கப்படும்.

குரோத் ஹார்மோன் அதிகம் சுரந்தால், உயரம் அதிகரிக்கும். கை, கால்கள், தாடைகள் எல்லாம் திடீரென பெரிதாகிக்கொண்டே செல்லும். மூளையில் கட்டிகள் இருந்தால், அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்படும். மேலும், மருந்து கொடுப்பதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய முடியும்.

எல்.ஹெச் மற்றும் எப்.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் அதிகம் சுரந்தால், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவும் குறையும். தலைவலி, பார்வைப் பிரச்னை, குழந்தையின்மை போன்றவை ஏற்படும். அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு கொடுக்கப்படுவது மட்டுமின்றி குறைபாடு ஏற்படும் ஹார்மோனுக்கு மாற்று உடலில் செலுத்தப்படும்.

போஸ்டீரியர் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிவரும் வாசோபிரஸின் ஹார்மோன் குறையும்போது, அதிகம் சிறுநீர் வெளியேறும். இந்தப் பிரச்னைக்கு வாசோபிரெஸின் ஊசி வழியாகவோ, ஸ்ப்ரே மூலமாகவோ மாத்திரை மூலமாகவோ உடலுக்குக் கொடுக்கப்படும்.

பிட்யூட்டரி சுரப்பியில் ஏதாவது ஒரு ஹார்மோன் சரியாக வேலை செய்யாவிட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் அதன் மூலக்காரணத்தைக் கண்டறிந்து, அதனைக் குணப்படுத்துவது அவசியம். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்ப்பட்டால், அது மற்ற நாளமில்லா சுரப்பிகளையும் பாதிக்கும். எனவே, பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னைகள் என்றால், உடனடியாக நாளமில்லா சுரப்பி நிபுணரை சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம்.

 

Leave a Reply