மனிதனை விட ஓரறிவு குறைவாக இருக்கும் விலங்குகள் நம்மை விட சாப்பாட்டு விஷயத்தில் புத்திசாலிகள். எலி, பூனை போன்ற விலங்குகள் என்னதான் கொலைப் பசியாக இருந்தாலும், உணவை உடனே சாப்பிட்டு விடாது, முதலில் முகர்ந்து பார்க்கும். சரியான ஆபத்தில்லாத உணவு என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே சாப்பிடும்.
ஆனால் மனிதன் அப்படியில்லை, கிடைத்ததை எல்லாம் சாப்பிடும் ரகம். அப்படி சாப்பிட்ட உணவை வயிறு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உடனே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி எடுத்து விடுகிறோம். இது ஒரு வியாதி கிடையாது. வியாதி வருவதற்கான முன்னெச்சரிக்கை.
வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாக்கள் அல்லது கெமிக்கல் புகுந்து விட்டது என்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை செயல். வாந்தி எடுக்கும் போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்றால் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவோ, தேவையற்ற கெமிக்கலோ வயிற்றின் இரைப்பைக்குள் நுழைந்துவிட்டால் அதனை உடனே கண்டுபிடிப்பது இரைப்பை சுவர்களில் உள்ள உணர்வு செல்கள்தான்.
இதுதான் நரம்புகள் மூலமாக மூளைக்குத் தகவலைத் தெரிவிக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு செல்லும் நரம்புக்கு ‘வேகஸ்‘ என்று பெயர். மூளைக்கு தகவல் கிடைத்ததும், மூளை கட்டளை பிறப்பிக்கிறது. அதன்படி ஒத்துக்கொள்ளாத உணவை சிறுகுடல் ஒன்றரையடி மேல் நோக்கி தள்ளிவிடுகிறது.
அது வாந்தியாக வெளியே வந்து விடுகிறது. சிறுகுடலில் இருக்கும் சிறு பகுதிகள் அத்தனையும் சேர்ந்து சுருங்கி இரைப்பைக்குள் இருக்கும் தகாத உணவை வாயின் வழியாக வெளியே தள்ளியாக வேண்டும். அதற்கு ஜீரண மண்டலம் மட்டுமல்லாமல், அதற்கு சம்பந்தமே இல்லாத சிறுகுடலைச் சுற்றியிருக்கும் தசைகள் கூட சுருங்கி உணவை வெளியே தள்ளுவதற்கு உதவி செய்கின்றன.
தேவையில்லாத உணவை வெளியே தள்ளுவதற்காக வாந்தி எடுப்பது என்றாலும் கூட, இது ஒரு தடவை மட்டும் நடந்தால் தப்பில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளிலே நாலைந்து முறைக்கு மேல் வாந்தி எடுத்தால் அது ஆபத்து. தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் உடலிலிருக்கும் நீரின் அளவு குறைந்து போய்விடும். இதனால் ரத்த அழுத்தமும் குறைந்துவிடும். உடம்பிற்கு ஆபத்து வந்துள்ளது என்பதை முதல் அறிக்கையாக வெளியிடுவது இந்த அறிகுறிகள்.