ஜாத்திரை விழாவை ஒட்டி, கிராம தேவதை உள்ளிட்ட மூன்று அம்மன் கோவில்களில் பகுதிவாசிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கிராமங்களில் வசிக்கும் பகுதிவாசிகள் ஒவ்வொரு ஆண்டும், வாழ்வு தரும் மாரியம்மனுக்கு ஜாத்திரை விழா நடத்துவது வழக்கம். ஊத்துக்கோட்டையில் வரும், 8ம் தேதி ஜாத்திரை விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று காலை, கிராம தேவதை செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். மாலை, எல்லையம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவிற்கான காப்பு கட்டப்பட்டது. வரும், 8ம் தேதி மாலை, மலர் அலங்காரத்தில் மாரியம்மன் அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு, படையல் வைத்து அம்மனை வழிபடுவர். மறுநாள், 9ம் தேதி மாலை, உடலில் அலகு குத்தல், வேப்பிலை ஆடை சுற்றிக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர். இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.