கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாடு, ஐரோப்பிய நாடுகளின் கடுமையான நிபந்தனைகளை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்த வாக்குப்பதிவை அண்மையில் நடத்தியது. இதில் சுமார் 62%பொதுமக்கள் நிபந்தனைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வாக்களித்தை தொடர்ந்து அதிருப்தி அடைந்த கிரீஸ் நாட்டின் நிதியமைச்சர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கிரீஸ் நாட்டி புதிய அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
புதிய நிதி மந்திரியாக யூக்ளிட் ட்சகலோடோஸ் என்பவரை அந்நாட்டு பிரதமர் தேர்வு செய்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த யூக்ளிட் இங்கிலாந்து நாட்டில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடி தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடனான பேச்சு வார்த்தையில் மிக முக்கிய பங்கேற்று தனது ஆலோசனையை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிதியமைச்சரின் பதவியேற்புக்கு பின்னர் கிரீஸ் நாடு நிதி நெருக்கடியில் இருந்து மீளுமா? நிதி நெருக்கடிக்கு புதிய அமைச்சரின் நடவடிக்கை எவ்வாறாக இருக்கும் என்பது குறித்து உலக நாடுகள் உற்று நோக்க தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.