பாரத் பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு தொடக்கம்

download (1)

சென்னையை அடுத்த சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தின் உலகத் தமிழாயம் சார்பில் அயலகத் தமிழர்களுக்கான அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தென்னாப்பிரிக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தலைவர் மிக்கிச் செட்டி பேசியதாவது:

தென்னாப்பிரிக்காவில் 45-க்கும் மேற்பட்ட சைவக் கோயில்களில் உள்ளன. இந்தக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த தகுதியான அர்ச்சகர்கள் கிடைக்காமல் பெரிதும் சிரமம் உள்ளது.

எனவே, தமிழார்வம் மிக்க தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு அருட்சுனைஞர் பயிற்சி அளித்து, அவர்களை அர்ச்சகர்களாக உருவாக்க முடிவு செய்து, பாரத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோவை அணுகினோம்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் உலகத் தமிழாயம் அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 21 மாணவர்கள் அருட்சுனைஞர் பட்டயப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டு, இங்கு பயிற்சி பெற வந்துள்ளனர் என்றார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ பேசும்போது, உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அங்கு வழிபாடு மேற்கொள்வதற்கென கோயில்களைக் கட்டி, அர்ச்சகர்கள் இன்றி அவதிப்படுகின்றனர். அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து அர்ச்சகர் பணிக்கான அருட்சுனைஞர் பட்டயப்படிப்பை மேற்கொள்ள பாரத் பல்கலைக்கழகம் உலகத் தமிழாயத்திற்கு 21 மாணவர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு தெய்வத் ததமிழ் அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் முருகனார் உதவியுடன் அருட்சுனைஞர் பட்டயப் படிப்புக்கான பாடத் திட்டம் ஒரு மாதம் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கபட உள்ளது என்றார்.
 

Leave a Reply