மதுபானத்தில் இருந்து தயாரிக்கப்படும் புதுவகை பெட்ரோ. நியூசிலாந்து விஞ்ஞானி சாதனை
தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பீர் மதுபானத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு எரிபொருள் மூலம் வாகனங்களை ஓட்டலாம் என்று நியூசிலாந்து விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எனவே வரும் காலத்தில் குடிக்க பயன்படுகிறதோ இல்லையோ, பெட்ரோலுக்கு பதில் பீர் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் பீர் தயாரித்த பின்னர் அதன் மூலப்பொருளில் இருந்து கிடைக்கும் சக்கையின் மூலம் ‘எத்தனால்’ என்ற எரிப்பொருளை கண்டுபிடித்துள்ளார். இந்த எரிபொருள் பெட்ரோலுடன் கலந்து 98 ஆக்டேன் சக்தி கொண்ட மாற்று எரிபொருள் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருளின் மூலப்பொருளான எத்தனால், சாராயம் போல் பூஞ்சைகளை ஊறல்போட்டு, கொதிக்கவிட்டு, வடிகட்டும் முறையில் தயாரிக்கப்படுவதால் இந்த புதுவகை பெட்ரோலுக்கு ‘பிரியுட்டோலியம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள ஒரேயொரு பெட்ரோல் பங்கில் தற்போது இந்த பிரியுட்டோலியம் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த பிரியுட்ரோலியத்தை பயன்படுத்தும் வாகனங்கள் எப்படி ஓடுகின்றது? என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் இதன் கண்டுபிடிப்பாளர் கூறியுள்ளார்.
சராசரி பெட்ரோலில் ஓடுவதைப்போலவே பிரியுட்டோலியம் பயன்படுத்தப்படும் கார்களும் செயலாற்றலில் எவ்வித குறைபாடும் இல்லாமல் ஓடுவதாக பல வாகன உரிமையாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பிரியுட்டோலியம் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்ற வாகனங்களை விட 8 சதவீதம் அளவுக்கு குறைவான கரியமில வாயுவை (கார்பன்) வெளியிடுவதாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்