ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்க பள்ளி மாணவர்களை குறி வைத்துள்ளதாகவும், சமீபத்தில் ஈராக்கில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி சென்றுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களை தங்கள் முகாம்களுக்கு கடத்தி சென்றுள்ள தீவிரவாதிகள் அங்கு அவர்களை மூளைச்சலவை செய்து வருவதாகவும், மதபோதனைகளும், ஆயுதப் பயிற்சியும் அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஆயுதம் ஏந்தும் அளவுக்கு உடல் வலுவில்லாத சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி சிறுவர்களை கடத்தி செல்லும்போது தீவிரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த 78 பேர்களையும் கடத்தி சென்ற தீவிரவாதிகள் அவர்களை அந்த சிறுவர்களை கொண்டே தலையை வெட்ட வைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுவர்கள் தான் இஸ்லாமிய அரசை அமைக்கும் சிங்கக் குட்டிகள் என்று தீவிரவாதிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.