டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் ஒரு இளம்பெண் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தான் சென்று கொண்டிருந்த டாக்சியின் டிரைவர் சுய இன்பம் செய்து கொண்டே டாக்ஸி ஓட்டியதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பெண் தன்னுடைய பேஸ்புக்கில் கூறியதாவது: “எல்லா இரவைப் போலத்தான் அன்றைக்கும் நான் ஓலா கேப்ஸ் மொபைல் ஆப் மூலம் ஃபரிதாபாத் செல்ல ஒரு கார் புக் செய்தேன். காரும் வந்தது. ஆனால் ‘டாக்ஸி ஃபார் சூர்’ நிறுவனம் காரை அனுப்பிவைத்திருந்தது.
கார் நன்றாகவே இருந்தது. ஓட்டுநரும் பார்ப்பதற்கு எந்த நெருடலையும் ஏற்படுத்தாதவாரே இருந்தார்.
வழக்கமாக காரில் பயணிக்கும்போது நான் நிறைய தொலைபேசி அழைப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். நான் பேசிக் கொண்டிருந்தபோது காரில் அதிக சத்ததுடன் பாட்டு இசைக்கப்பட்டது. நான் அப்போது 3 முறை குறுக்கிட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறினேன்.
நான் செல்ல வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் 25 நிமிடங்களில் இலக்கை அடைந்துவிடுவேன். அப்போதுதான் திடீரென கார் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. டிரைவர் ஏதோ முனகுவதுபோல் இருந்தது. உடனே தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு ஓட்டுநரிடம் காரை மிதமான வேகத்தில் ஒழுங்காக ஓட்டுமாறு தெரிவித்தேன்.
அதை சொல்லிவிட்டு வேறு ஒரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள எத்தனித்தேன். அப்போது நான் பார்த்த காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அந்த ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது முனகலும், முகத்தில் ஒருவிதமான புன்னகையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. பித்தம் தலைக்கேறியிருந்த அந்த நபர் எனக்குள் கிலி பரவச் செய்தார். இந்த மாதிரியான ஓட்டுநர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். நான் பார்த்த காட்சி என்னை இன்னும் பல நாட்களுக்கு நடுநிசியில் வேதனைப்படுத்தும்.
இரவுப் பயணம், தனியாக இருக்கிறேன், ஓட்டுநரோ ஆபத்தானவராக இருக்கிறார். செய்வதறியாது கார் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டேன். வீடு நெருங்கும் நேரத்தை எண்ணிக் கொண்டு இருந்தேன். அந்த இரவில், தனிமையில் என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
சில நிமிடங்களில் வீட்டை அடைந்துவிட்டோம். காரில் இருந்து இறங்கியதும் “ஏன் அப்படி நடந்து கொண்டாய்?” என அந்த ஓட்டுநரிடம் கேட்டேன்.
ஆனால், அவனோ “நான் ஒன்னும் செய்யவில்லை” என்றான்.
ஓலா கேப்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன் அவர்கள் டாக்ஸி ஃபார் சூர் நிறுவனத்தின் கால் சென்டருக்கு போன் அழைப்பை இணைத்தனர். மறுமுனையில் பேசிய பெண் வழக்கமான பதிலைச் சொன்னார் “உங்கள் புகார் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று.
இந்த பதிவுடன் ஒரு ஃபோட்டோவும் இணைத்துள்ளேன். அதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் குறித்து விவரம் உள்ளது. தயைகூர்ந்து இந்த நபர் நீங்கள் புக் செய்யும் வாடகை காருடன் வந்தால், அதில் பயணிக்காதீர்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.