தேசிய கீதத்தில் திருத்தம் செய்வதா? ராஜஸ்தான் கவர்னருக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்.

kalyan singhபிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாஜகவினரும், மத்திய அமைச்சர்களும் கூறி, அவ்வப்போது வாங்கிக்கட்டி கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது பாஜகவின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில ஆளுநருமான கல்யாண் சிங் ராஜஸ்தானில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசும் போது தேசிய கீதத்தின் சில வார்த்தைகளை திருத்தம் செய்ய வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தில் “ஜனகணமன அதிநாயக ஜெயஹே’ என்ற முதல் வரியில் இடம் பெற்றிருக்கும் “அதிநாயக’ என்ற வார்த்தை ஆங்கிலேயரைப் புகழ்வதாக குறிக்கும் வார்த்தை என்றும், ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு சென்ற பின்னர் அவர்களை புகழ்வதாக அமைந்திருக்கும் அதிநாயக’ என்ற வார்த்தைக்குப் பதிலாக மங்கள் என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் கவர்னரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  இது தேசிய கீதத்துக்கும் அதை இயற்றிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.  தேசிய கீதத்தின் பாடல் வரிகளில் ஆங்கிலேயரைப் புகழும் வார்த்தைகள் இருப்பதாக கடந்த 1937ஆம் ஆண்டே சர்ச்சை கிளம்பியதாகவும், ஆனால் இந்த சர்ச்சைக்கு அப்போதே விளக்கம் கூறி ரவீந்திரநாத் தாகூர் தெளிவுபடுத்தியதாகவும் அரசியல் கட்சி தலைவர்களும், சமூக நல அக்கறையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply