ஜெ.சொத்து குவிப்பு வழக்கு: திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு தாக்கல். விசாரணை எப்போது?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, பின்னர் தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்று கொண்டார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
ஆனால் அந்த மனுவில் ஒருசில தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற பதிவாளர், தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
புதிய திருத்தப்பட்ட மனுவை, கர்நாடக வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இதேபோல், திமுக தனியாக தாக்கல் செய்த மனுவிலும் குறைகளை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதை அடுத்து, திமுக சார்பிலும் விரைவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.