சென்னையில் கார் விபத்து. ப.சிதம்பரம் உயிர் தப்பினார்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், முன்னாள் நிதியமைச்சருமாகிய ப.சிதம்பரம் சென்ற கார் சென்னையில் விபத்தில் சிக்கியது. இருப்பினும் அவர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இன்று காலை டெல்லி செல்வதற்காக ப.சிதம்பாரம் தனது காரில் விமான நிலையம் சென்று கொண்டிருந்தபோது கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை அருகே உள்ள சிக்னலில் அவருடைய கார் நின்றது. அப்போது அவரது பாதுகாப்பு காவலர்களின் கார் மீது பின்னால் வந்த ஒரு கார் பயங்கரமாக மோதியது. இதனால் பாதுகாப்பு கார், ப.சிதம்பரத்தின் காரின் பின்னால் இடித்தது. இதில் ப.சிதம்பரம் சென்ற காரின் பின்பக்க விளக்கு உடைந்து கண்ணாடி நொறுங்கியது. இதில் ப.சிதம்பரத்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பாதுகாப்பு காவலர்களின் கார் சேதம் அடைந்ததுடன் அதில் இருந்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
விபத்தை நேரில் பார்த்த ப.சிதம்பரம் உடனடியாக காரை விட்டு இறங்கி பாதுகாப்பு போலீசாரிடம் அவர்களுடைய காயம் குறித்து விசாரித்தார். லேசான காயம்தான் என்பதை அறிந்ததும் அவர்களை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிவிட்டு விமான நிலையம் சென்றார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய மாருதி ஷிப்டு காரில் பாலாஜி, விஜயகுமார், ஜெய்சன், பூஜா உள்பட 5 பேர் இருந்தனர். இவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் புதுச்சேரியில் இருந்து சைதாப்பேட்டை வந்தபோது விபத்து நடந்தது.
காயம் அடைந்தவர்கள் குரோம்பேட்டை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.