சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்ற கிளை? இன்று விசாரணை

supremecourtசென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் அமைக்கப்பட்டது போன்று புதுடெல்லி உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படவேண்டும் என்ற கருத்து நீண்ட நாளாக இருந்து வந்த நிலையில் இதுகுறித்து வழக்கு விசாரணை ஒன்று இன்று  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவின் கடைகோடியில் அமைந்துள்ள தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்வதில் சிரமங்கள் இருப்பதையொட்டி, சென்னை உள்பட நாட்டின் முக்கியமான நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளைகளை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், இது தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் மத்திய சட்ட ஆணையம் ஆகியவை, உச்ச நீதிமன்ற கிளைகள் அமைப்பதற்கு ஆதரவாக அறிக்கை அளித்தன.

இந்நிலையில், சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை ஒன்றை நிறுவ வேண்டும் என வழக்கறிஞர் ஏ.எம்.கிருஷ்ணா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”இந்திய அரசியல் சட்டப்படி நீதி வசதி என்பது முக்கியமான மனித உரிமையாகும். ஆனால் ஒரு வழக்குக்காக தமிழ்நாடு, குஜராத், அசாம் போன்ற தொலைதூர மாநிலங்களை சேர்ந்த ஒருவர், உச்ச நீதிமன்றத்தை அணுகுவது மிகவும் சிரமத்துக்குரியதாக உள்ளது.

அந்த பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வரும் போக்குவரத்து செலவு, தங்கும் வசதி போன்ற செலவுகளால் நீதியை பெறுவதற்கு மிகப்பெரும் செலவினம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றமும், அதன் கிளைகளை தெற்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் அமைக்க பரிந்துரைத்து உள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நம்மைப் போன்ற உண்மையான ஜனநாயக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. எனவே, நீதித்துறையை பல வழிகளில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். அதனால், உச்ச நீதிமன்ற கிளை ஒன்றை சென்னையில் நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை உடனே தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது, தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா, அமிதாவா ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்கப்படுமா? என்பது தெரியவரும்.

Leave a Reply