பாஜகவில் சேரப்போகிறாரா மு.க.அழகிரி. பெரும் பரபரப்பு

பாஜகவில் சேரப்போகிறாரா மு.க.அழகிரி. பெரும் பரபரப்பு

alagiriகட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் சமீபத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மகனுமாகிய மு.க.அழகிரி, மதுரையில் இன்று பேட்டியளித்தார். விரைவில் மதுரையில் நடைபெற உள்ள ஒரு விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் மு.க.அழகிரி பா.ஜ.க.வில் இணையப் போவதாக வெளிவந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி, ”  ”நான் பா.ஜ.க.வில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. என்னுடைய தலைவர் அண்ணா. அவருக்கு பின்னால் கலைஞர் கருணாநிதி தான்.

என்னுடைய கட்சி தி.மு.க. தான். நான் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். அவர் என்னை தொண்டனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது.

நான் மீண்டும் தி.மு.க.வில் எப்போது இணைவேன் என்பது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அந்த நல்ல நாளுக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால், அந்த நல்ல நாள் எப்போது வரும் என்றும் நான் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறி உள்ளார்.

மு.க.அழகிரி இவ்வாறு கூறினாலும், அவர் பாஜகவில் இணையப்போவதாக பாஜக வட்டாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது. திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கி அவமரியாதை செய்ததாலும், ஒருசில வழக்குகளில் இருந்து விடுபடவும், அவர் பாஜகவில் சேரப்போவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply