லண்டன் நிறுவனம் ஒன்றுடன் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றில் ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கில் தன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தடை கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விஜய் மல்லையாவின் மனுவை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவில் விஜய் மல்லையா மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் இந்த வழக்கு தொடர்பான செலவு ரூ.10 லட்சம் அபராதமாக செலுத்துமாறும் மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்கம் கோரி அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்த அமலாக்கப் பிரிவு, விஜய் மல்லையா தனது கிங்பிஷர் பிராண்ட் மதுபானங்களை வெளிநாடுகளில் விளம்பரப்படுத்துவதற்காக நிதி ஏற்பாடு செய்ததில் ஃபெரா விதிமுறைகளை மீறியதாக தெரிவித்தது.
அதாவது, 1995-ல் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெனட்டன் ஃபார்முலா நிறுவனத்துடன் கிங்பிஷர் மதுபான விளம்பரத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.