காமராஜர் ஆட்சியில் 12 ஆயிரம் பள்ளிகள். திராவிட கட்சிகளின் ஆட்சியில் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள். அன்புமணி ஆவேச பேச்சு
இதுவரை தர்மபுரி, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தி வந்த பாமக, தற்போது கோவையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில், முன்னாள் அமைச்சரும், பா.ம.க இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ”எங்களுக்கு மாற்றம் வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்று ஆர்வமாக இந்த மாநாட்டில் அலைகடலென்று ஏராளமானவர்கள் கலந்துகொண்டுள்ளீர்கள். இது சாதாரண கூட்டம் கிடையாது. சாதிக்கின்ற கூட்டம்.
இந்தியாவுக்கு மும்பை எப்படி முக்கியமோ, அதுபோல் தமிழ்நாட்டுக்கு கோவை முக்கியம். இந்த மண்ணில்தான் ஜி.டி.நாயுடு போன்றவர்கள் எல்லாம் தொழில் தொடங்கி வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். நாராயணசாமி நாயுடு போன்றவர்கள் விவசாய வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். கொங்கு மண்டலம் இந்தியாவிலேயே அன்னிய செலாவணியை அதிக அளவில் ஈட்டிக்கொடுக்கும் மண்டலமாகும். இன்று இந்த மண்டலம் நலிவடைந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை நசிந்துவிட்டது. இப்போது அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்போது மாற்றத்துக்கு நேரம் வந்துவிட்டது. முன்னேற்றத்துக்கு நேரம் வந்துவிட்டது. பா.ம.க. ஆட்சி செய்ய நேரம் வந்துவிட்டது. 50 ஆண்டுகாலம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்து தமிழ்நாட்டை நாசப்படுத்தியது போதும். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை இளைஞர்கள் மனதிலும் எங்களுக்கு மாற்றம் வராதா? என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது. யார் அதனை கொண்டுவருவார்கள் என்ற ஏக்கம் உள்ளது. அதற்கான விடைதான் பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழ்நாட்டில் காமராஜர்தான் சிறந்த ஆட்சியை கொடுத்தார். அணைகளை கட்டினார். தொழிற்சாலைகளை தொடங்கினார். காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை கட்டினார். ஆனால் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் இவர்களுடைய ஆட்சி காலத்தில் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை தொடங்கி இருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம். எங்களால் நேர்மையான, கண்ணியமான ஆட்சியை நிச்சயமாக கொடுக்க முடியும்.
தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் முதலமைச்சர் என்ற ஒரு பதவியை கடவுளுக்கு சமம் என்று ஒரு மாயையை உருவாக்கி உள்ளனர். முதலமைச்சர் என்றால், ஒரு பொதுமக்களுடைய வேலைக்காரன்தான். ஆனால், தமிழ்நாட்டில் இது தலைகீழாக உள்ளது. பொதுமக்கள்தான் வேலைக்காரர்களாக உள்ளனர். முதலமைச்சர் கடவுளாக மாறிக்கொண்டு இருக்கிறார். இவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு குடியை, சினிமாவை கொடுத்ததுதான் மிச்சம். போதையிலே மக்களை அடிமையாக்கிய திராவிட கட்சிகளை அகற்றுகின்ற நேரம் வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 13 வயது சிறுவர்களும் மது குடித்து வீதியில் கிடக்கும் அவல நிலை உருவாகிவிட்டது. 4 வயது குழந்தைக்கும் மது புகட்டி உள்ளனர். தமிழ்நாடு எங்கு சென்று கொண்டு இருக்கிறது?. தமிழ்நாட்டில் இலவசம் என்ற பெயரில் நிதி பாழடிக்கப்படுகிறது. பொதுமக்களின் வரிப்பணத்தை கொண்டு நல்ல முறையில் திட்டங்களை கொடுக்க முடியும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இ-கவர்னன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி சிறப்பான ஆட்சியை கொடுப்போம். சேவை உரிமை சட்டத்தை அளிப்போம். லோக்அயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம். ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொண்டு வருவோம். இப்படியெல்லாம் பா.ம.க. ஆட்சி ஒரு தியாகமான ஆட்சியாக இருக்கும். இந்தியாவில் சுகாதார உரிமை சட்டம் கொண்டு வரவேண்டும். இதற்காக பா.ம.க. முழுமையாக பாடுபடும். அரசியல் கலாசார மாற்றம், அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் வரவேண்டும்.
சுதந்திர இந்தியாவில் அதிக அளவில் ஊழல் செய்கிற அரசாக இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு உள்ளது. இமாலய ஊழல் நடந்து கொண்டு இருக்கிறது. மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மின்சாரத்துறையில் கொள்ளை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, பால்துறையில் கொள்ளை என்று அனைத்து துறைகளிலும் கொள்ளை உள்ளது. கவர்னரை சந்தித்து தமிழக அரசு மீது நடவடிக்கை எடுங்கள் என்று மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள். நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பார்கள்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அது இடைத்தேர்தல் கிடையாது. எடைத்தேர்தல் ஆகும். எடைக்கு எடை பணம், எடைக்கு எடை பொருள், எடைக்கு எடை பிரியாணி, எடைக்கு எடை மதுபானம் என்று வாரி கொடுத்து வெற்றியை வாங்கியுள்ளனர். எதிர்க்கட்சி இல்லாத வெற்றியை மாபெரும் வெற்றி என்று கூறுவதை ஏற்க முடியாது. உண்மையான வெற்றி தருமபுரியில் நடைபெற்ற தேர்தலில் பா.ம.க. பெற்ற வெற்றிதான்.
சென்னையில் மெட்ரோ ரயிலை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் குழாய் சண்டை போடுகிறார்கள். மெட்ரோ ரயில் லண்டன் நகரில் 150 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. நியூயார்க் நகரில் 138 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இப்போது வெறும் 10 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னையில் செயல்படுத்திவிட்டு குழாயடி சண்டை போடுகிறார்கள்.
இலவச திட்டங்களால் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிராமப்புறம், நகர்ப்புற இளைஞர்களுக்கு திறனை வளர்த்து வளர்ச்சிக்கு வழி வகுப்போம். விவசாயிகளை தங்க தட்டில் வைத்து பாதுகாப்போம். விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்போம். விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். கல்விக்கு முக்கியத்துவம் அளிப்போம். இலவச தரமான கல்வியை அளிப்போம். சுகாதாரத்தை பற்றி பேசுவதற்கு பா.ம.க.வுக்குதான் முழு உரிமையும் உள்ளது. நான் மத்திய சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது, தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தை கொண்டு வந்தேன். இதன் மூலம் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகள் கிடைத்து வருகிறது. புகையிலை ஒழிப்பு திட்டத்தையும் செயல்படுத்தினோம்.
தமிழ்நாட்டில் மதுவினால் மிகபெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மதுகுடித்துவிட்டு அதிக அளவு விபத்து உயிரிழப்பு, இளம்விதவைகள், தற்கொலைகள், பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான். தொழில்துறையை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ஒற்றை சாளர முறையை கொண்டு வந்து 30 நாட்களில் அனைத்து அனுமதிகளும் கிடைக்கச்செய்வோம். தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் கிடையாது. அது மக்கள் மன்றமாக செயல்படவில்லை. அம்மா மன்றமாக செயல்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சிகளுக்கு 70 சதவீதம் பேச வாய்ப்பும், ஆளும் கட்சியினருக்கு 30 சதவீதம் பேச வாய்ப்பும் வழங்குவோம். மாவட்டம்தோறும் அமைச்சரவை கூட்டங்களை நடத்துவோம். எனவே மக்கள் பா.ம.க.வுக்கு வாய்ப்பு வழங்கி, தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல உதவ வேண்டும்” என்றார்.