காதில் இரைச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்

9f414416-ece1-4a16-9e58-a2510ac19753_S_secvpf

காது இரைச்சல் (Tinnitus) என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; உடலில் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி. காது இரைச்சலுக்கான காரணம் காதிலும் இருக்கலாம்; உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம்.  காது, காதிலுள்ள எலும்புகள், காதிலிருந்து மூளைக்குச் செல்லும் காது நரம்பு, மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும்.

காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, `இஸ்ஸ்ஸ்…’ என்ற இரைச்சலோ, குக்கர் விசில் அடிப்பது போன்றோ கேட்பதாக இருந்தால் அந்த நபருக்கு ‘காது இரைச்சல்’ இருப்பதாக அர்த்தம். இந்த இரைச்சலின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு இரைச்சல் தொடர்ச்சியாகக் கேட்கும்; இன்னொருவருக்கு விட்டு விட்டுக் கேட்கும். 

காது இரைச்சலுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைத் தற்காலிகக் காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம். காதுமடலைச் சேர்த்துச் சிறு துவாரமாகக் காதுக்குள் செல்கிற வெளிக்காதுக்குழலில், இயற்கையாகச் சுரக்கிற மெழுகு உருண்டு திரண்டு கட்டியாகிக் காதை அடைத்துக்கொண்டால், காளான் தொற்று ஏற்பட்டால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். இவையெல்லாமே தற்காலிகமாகக் காது இரைச்சலை உண்டாக்குபவை.

காதில் உள்ள அழுக்கை அகற்றிவிட்டால் அல்லது காளான் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவிட்டால் காது இரைச்சலில் இருந்து விடைபெறலாம். ஜலதோஷம் பிடிப்பதால்கூடச் சில நேரங்களில் தற்காலிகமாகக் காது இரைச்சல் உண்டாகும். அதேநேரத்தில் சில காரணங்களால் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும். முதுமை இதற்கு முக்கியக் காரணம். வயதாக வயதாக நடுக்காது எலும்புகள், காக்ளியா எனும் நத்தை எலும்பு மற்றும் காது நரம்பிழைகள் சிதைவடைவதால் காதுக்குள் இரைச்சல் தொடங்குவது வழக்கம்.

காதுக்குப் போகும் ரத்தம் முதுமையில் குறைவதாலும் காதில் இரைச்சல் ஏற்படுவதுண்டு. வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கிற செவிப்பறையில் துளை விழுந்துவிட்டால், காது இரைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுபோன்று நடுக்காதுக்குள் நீர் கோத்துக்கொண்டால், சீழ் பிடித்துவிட்டால் காது இரைச்சல் ஏற்படும். 

‘எலும்பு முடக்கம்’ (Otosclerosis) எனும் நோய் தாக்கும்போது, எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்குச் செல்வது தடைபடும். அப்போது காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும். ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI ஸ்கேன், MRN ஸ்கேன், MRA ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் காது இரைச்சலுக்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இது முழுமையாகக் குணமாகும். 

Leave a Reply