சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடக்கி வைக்கிறார் என இப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக துணைவேந்தர் செ.மணியன் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.எஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமை வகித்து கலந்தாய்வை தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்குகிறார். விழாவில் உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை படிப்பில் சேர 11,053 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 644 விண்ணப்பங்கள் தகுதியில்லாததால் நிராகரிக்கப்பட்டன. தகுதி பெற்ற விண்ணப்பங்கள் 10,409. இதில் 29 விண்ணப்பதாரர்கள் மாற்றுத் திறனாளிகள்.
தகுதி பெற்ற விண்ணப்பங்களுக்கு கடந்த 10-ஆம் தேதி சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்டது. பி.எஸ்சி வேளாண்மை படிப்புக்கு 1,000 பேரும், பி.எஸ்சி தோட்டக்கலை படிப்புக்கு 70 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வுக்கு 2,111 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கான கடிதம் விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. குறுந்தகவல் (நஙந) மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்களின் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு
3 சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும்.
கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவினர்-1,087 பேரும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர்-412 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்-50 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)-90 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்-191 பேரும், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (அருந்ததியர்)-102 பேரும், பழங்குடியினர்-50 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
புதிய படிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புலத்தில் இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி மீன்வள அறிவியல் படிப்பு தொடங்கப்படவுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் மையம் தொடங்கப்படவுள்ளது என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.